பாலியல் சுரண்டல்களை சகித்துக்கொள்ளாத பல்கலைக்கழகச் சூழலே பால்நிலை சமத்துவத்திற்கான அடிப்படை
பாலியல் சுரண்டல்களை சகித்துக்கொள்ளாத பல்கலைக்கழகச் சூழலே பால்நிலை சமத்துவத்திற்கான அடிப்படை
கடந்த 7ம் திகதி (07/02/2026) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் மற்றும் ஆங்கிலத் துறையின் ஏற்பாட்டில், ‘Counting and Cracking’ எனும் நாடகத்தின் எழுத்தாளர் S. ஷக்திதரன் மற்றும் நடிகர் குழுவுடனான உரையாடலொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த நிகழ்வின் மேடையில், பொய்களின் அடிப்படையில் காதல் மற்றும் உறவு என்ற பெயரில் பல பெண்களையும், திருநங்கை ஒருவரையும் பாலியல் சுரண்டல்செய்த ஷோபாசக்தியும் இருந்த படமொன்று ஷோபாசக்தியினால் அவரது முகநூலில் பகிரப்பட்டிருந்தது.
கடந்த வருடம் ஷோபாசக்தியின் பாலியல் சுரண்டல் தொடர்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்ணிலைவாதிகள், செயற்பாட்டாளர்கள், சினிமா மற்றும் இலக்கியத்துறையைச் சார்ந்த பெண்களும், குயர் சமூகத்தினரும் கையொப்பமிட்டு பாதிக்கப்பட்டவர்களுடன் இணைந்து அவரது பாலியல் சுரண்டல் பாங்குகளை அம்பலப்படுத்தி ஒரு அறிக்கையினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் ஏனைய பாலியல் சுரண்டல்வாதிகளைப்போல இவரும் மறுப்புத் தெரிவித்து முற்றிலும் பொய்களால் அமைந்தஅறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையானது முற்றிலும் பொய்யாலானது என்பதைச் சுட்டிக்காட்டி அதற்கமைய குழுமம் வெளியிட்ட இரண்டாவது அறிக்கைக்கு எந்தவித பதிலும் கூறாமல் அந்த அறிக்கை வெளிவருவதற்குக் காரணமென அவர் ஊகித்த சில பெண்ணிலைவாதிகளை முகநூலில் முடக்கிவிட்டு தனது அன்றாட வாழ்க்கையினைத் தொடர்ந்திருந்தார். இத்தகைய ஒருவரை, கல்விச் சூழலுக்குள் உள்வாங்குவதையும், மாணவர்கள் மத்தியில் அவருக்கான அங்கீகாரத்தினை ஏற்படுத்தி, மேடையமைத்துக்கொடுக்கும் போக்கினையும், நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். திட்டமிட்டுப் பெண்களையும், குயர் சமூகத்தினரையும் தனது வலைக்குள்வீழ்த்தி அவர்களுக்கெதிரான பாலியல் சுரண்டல்களில் ஈடுபட்டுவந்த ஷோபாசக்திக்கு மேடையமைத்துக் கொடுப்பதன்மூலம் பெண்களுக்கும், குயர் சமூகத்தினருக்கும் எதிரான பாலியல் சுரண்டல்களை இயல்பாக்கம் செய்ய முயற்சிக்கும் யாழ்பல்கலைக்கழகத்தின் மொழியியல் மற்றும் ஆங்கிலத் துறையின் தலைவர் மற்றும் நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவினருக்கு எமது கண்டனத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
பாலியல் சுரண்டல்களில் ஈடுபடும் ஷோபாசக்தி போன்றோரை அவர்களுக்கிருக்கும் புகழ், பிரபல்யம், எழுத்தாற்றல் போன்ற பல காரணங்களை முன்வைத்து சிலர் தமது தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக பாதுகாக்க முயன்றதையும், நியாயப்படுத்த முயற்சித்ததையும் நாம் அறிந்திருக்கின்றோம். இலங்கையில் மட்டுமன்றி உலகம் முழுவதும் இத்தகைய சுரண்டல்வாதிகளைப் பாதுகாப்பதற்கு கலை, இலக்கியம், சினிமா போன்றவை கருவிகளாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சிலியின் கவிஞன் பப்லோ நெரூடா (Pablo Neruda) தொடக்கம் கடந்த வருடம் பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட பிரபல்யமான எழுத்தாளர் நீல் கைமன் (Neil Gaiman) உட்பட அண்மையில் சிறுவர்களை பாலியல் நோக்கங்களுக்காக ஆட்கடத்தல் செய்தமை உள்ளிட்ட பாரிய குற்றங்களில் ஈடுபட்டதாக வெளிப்படுத்தப்பட்ட ஜெப்ரி எப்ஸ்xரீன் (Jeffry Epstein) வரை இந்தமுறையிலேயே சாதாரணமயப்படுத்தப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வந்திருக்கின்றனர். தமிழ்நாட்டிலும், இலங்கையிலும்கூட (இப்போக்குகளின் தீவிரத்தன்மையில் மாற்றங்கள் இருக்கின்றபோதிலும்) இதே நிலை தான் காணப்படுகின்றது.
ஜெப்ரி எப்ஸ் ரீனால் பாதிக்கப்பட்ட பெண்கள் பேசியபோது அவர்களும் பணத்திற்காகப் பொய்கூறுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டார்கள். அவர்களது ‘உண்மையினையும்’, ‘குரல்களையும்’ முடக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் காலம் உண்மையை உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளது. எப்ஸ்xரீன் தனது குற்றங்களைத் தொடர்வதற்கு உறுதுணையாக இருந்த கிளெய்ன் மக்ஸ்வெல் (Ghilaine Maxwell) உடைய பங்கும், ஜெப்ரி எப்ஸ்ரைனின் குற்றங்களை சாதாரணமயப்படுத்திய சேரா பேகுசன் (Sarah Feguson) மற்றும் நோம் சொம்ஸ்கி (Noam Chomsky) போன்றோரது பங்கும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஜெப்ரி எப்ஸ்xரீன்கள் எமது சூழலிலும் இருக்கின்றார்கள். இவர்கள் தங்களது அதிகாரம், ஆதரவு, பணபலம், புகழ் என்பவற்றிற்கேற்ப தத்தமது சூழலில் பாலியல் சுரண்டல் நடத்தைகளில் ஈடுபடுகின்றார்கள். இத்தகைய சுரண்டல்வாதிகளைத் தமது நலன்களுக்காகப் பாதுகாக்கும், சாதாரணமயப்படுத்தும் சேரா பேகுசன்களும், நோம் சொம்ஸ்கிகளும் இங்கும் இருக்கின்றார்கள். (குறிப்பு: அறிக்கையின் இப்பகுதியானது - ஒவ்வொரு குற்றத்திற்கும், ஒவ்வொரு பாலியல் சுரண்டல் சம்பவத்திற்கும் அதனை இயலச்செய்யும் மனிதர்கள், குற்றம் நடைபெறுவதற்குச் சாத்தியமான சூழலினை உருவாக்குவதற்குப் பங்களிப்புச் செய்கின்றார்கள். அத்துடன் அத்தகைய குற்றங்களும், பாலியல் சுரண்டல்களும் தொடர்வதற்கும் பலவகையில் காரணகர்த்தாக்களாக இருக்கின்றார்கள். எனவே - இத்தகைய பாலியல் சுரண்டல்கள் ஒருவரால் மட்டும் தனித்து மேற்கொள்ளப்படுபவை அல்ல என்பதையும், அதனை இயலச்செய்யும் மனிதர்களையும், கட்டமைப்பையும் அடையாளப்படுத்த வேண்டும் என்பதையும் நோக்காகக்கொண்டுள்ளது. மாறாக ஜெப்ரி எப்ஸ்xரீனையோ அல்லது வேறு எவரையுமோ எமது சூழலில் பாலியல் சுரண்டலில் ஈடுபடும் எவருடனுமோ அல்லது அதனைச் சாத்தியப்படுத்தும் எவருடனுமோ literally ஒப்பிடுவதனை நோக்காகக் கொண்டதல்ல)
இத்தகைய சம்பவங்கள் எங்கோ தூரத்தில் இடம்பெறும்போது அதனை எதிர்த்துக் கேள்விகேட்கும் பலர் தாம் வாழும் சூழலில் அல்லது தமக்குத் தெரிந்த ஒருவரால் மேற்கொள்ளப்படும் பாலியல் சுரண்டல்களுக்குத் துணைசெய்பவர்களாக இருப்பதைப் பார்க்கும்போது அவர்களின் இரட்டை நிலைப்பாடும், அரசியல் நேர்மையற்றதன்மையும் அப்பட்டமாக வெளிப்படுவதைக் காணமுடிகின்றது. அத்துடன், இத்தகைய சந்தர்ப்பங்களை அவதானிக்கும்போது, அவற்றில் ஆழமான மேட்டுக்குடி வர்க்க நலன்கள் புரையோடியிருப்பதனைக் கண்டுகொள்ள முடிகின்றது.
தொடர்ச்சியாக பல்கலைக்கழகங்களுக்குள் இடம்பெறும் பாலியல் சுரண்டல்கள் முறையாக எதிர்கொள்ளப்படாமல் இருப்பதானது மாணவர்களுக்கும், கனிஷ்ட விரிவுரையாளர்களுக்கும் பாரிய பிரச்சனையாக இருந்துவருகின்றது. குறிப்பாக, யாழ் பல்கலைக்கழகத்தினுள், முகாமைத்துவ பீடத்தில் பகிடிவதை எனும் பெயரில் பாலியல் அத்துமீறல்கள், துஷ்பிரயோகங்கள், சீண்டல்கள் என்பவற்றுடன் உடல்ரீதியான தாக்குதல்களும் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டிருந்ததைத்தொடர்ந்து, அண்மையில் இந்த விடயம் குறித்து குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கும் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. இதுகுறித்து யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் பதில் வழங்காத நிலையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் நேரடி விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது. இது குறித்த விடயம் தொடர்பில் யாழ் பல்கலைக்கழகத்தின் அசமந்தப்போக்கினையும், அலட்சியத்தையும் எடுத்துக்காட்டுவதுடன், இத்தகைய வன்முறைகளுக்கும் சுரண்டல்களுக்கும் மறைமுகமாகத் துணைபோகும் தன்மையையும், இவை தொடர்வதற்குக் காரணமாக இருக்கும் தன்மையினையும் எடுத்துக்காட்டுகின்றது. பாலியல் சுரண்டல்களை யாழ்பல்கலைக்கழகம் உப-கலாசாரமாக கொண்டிருக்கின்ற இந்தப் பின்னணியிலேயே ஷோபாசக்தியின் பல்கலைக்கழக நிகழ்வையும் அணுகவேண்டியிருக்கின்றது.
துறைத்தலைவர் கலாநிதி திருவரங்கன் அவர்களால் அவரது முகநூலில் வெளியிடப்பட்டிருந்த இந்த நிகழ்விற்கான பொது அழைப்பிதழில் ஷோபாசக்தியின் பங்குபற்றுதல் தொடர்பில் எந்தவொரு விடயமும் வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. நிகழ்வின் பிறகும் அவர் இந்த நிகழ்வுபற்றிய படங்கள் எதையும் வெளியிட்டிருக்கவில்லை. தொடர்ச்சியாக இனரீதியான ஒடுக்குமுறை, அரச வன்முறை போன்றவற்றிற்கெதிராகக் குரல்கொடுத்துவரும் கலாநிதி.திருவரங்கன் பெண்களுக்கும், குயர் சமூகத்தினருக்கும் எதிரான ஒடுக்குமுறைகள் மற்றும் பாலியல் சுரண்டல்கள் தொடர்பில் இத்தகைய அலட்சியப்போக்கினைக் கொண்டிருப்பது தொடர்பில் நாம் கவலையுறுகின்றோம். இத்தகைய நிகழ்வினை பல்கலைக்கழகத்தில் ஏற்பாடுசெய்தமையினை, பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட ஷோபாசக்தியை சாதாரணமயப்படுத்தும் முயற்சியாகவே நாம் கருதுகின்றோம். மாணவர்கள் குழுமியிருக்கும் இத்தகைய கல்விச் சூழலில், குறிப்பாக பகிடிவதைக்கும் மேலதிகமாக விரிவுரையாளர்களால் மாணவியருக்கு மேற்கொள்ளப்படும் பாலியல் சுரண்டல்கள் தொடர்ந்தும் கவனத்திற்கொள்ளப்படாதிருக்கும் சூழலில் ஷோபாசக்தி போன்ற ஒருவரை எந்தவித விமர்சனப்போக்கும், கேள்விகளும் இன்றி கலாநிதி.திருவரங்கன் போன்றோரும் நிகழ்வு ஏற்பாட்டாளர்களும் உள்வாங்கி மேடையமைத்துக்கொடுப்பதனை பல்கலைக்கழகங்களினுள் தொடரும் பாலியல் சுரண்டல் கலாசாரத்தின் ஒரு பிரதிபலிப்பாகவே நாம் கருதுகின்றோம்.
நாம் பெண்கள் மற்றும் குயர் சமூகத்தினருக்கெதிரான பாலியல் சுரண்டல்கள் தொடர்பான யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்தினதும், மொழியியல் மற்றும் ஆங்கிலத் துறைத்தலைவர் கலாநிதி.திருவரங்கன் போன்றோரினதும் அசமந்தப்போக்கினையும், கண்டுகொள்ளாதநிலையினையும் சுட்டிக்காட்டுவதுடன், பெண்களுக்கும், குயர் சமூகத்தினருக்கும் எதிரான பாலியல் சுரண்டல்களை உடனடியாக எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனையாக அணுகி யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் உரிய தீர்வுகளை முன்வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றோம். பாலியல் சுரண்டல்கள் தொடர்பில் அறிக்கையிடவும், உரிய முறையில் விசாரணைகளை மேற்கொள்வதற்குமான அணுகும்தன்மையுடன்கூடிய கட்டமைப்புக்களை உருவாக்க வேண்டுமெனவும் நாம் வலியுறுத்துகின்றோம். மேலும், பாலியல் சுரண்டல்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பில் எவ்வித சகிப்புத்தன்மையும் அற்ற தீவிர நிலைப்பாட்டினைக் கைக்கொள்வதன்மூலம் பல்கலைக்கழகச் சூழல் அனைவருக்கும் பாதுகாப்பானதாக இருப்பதனை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் நாம் கோருகின்றோம். அதன் தொடர்ச்சியாக, பல்கலைக்கழகத்திற்குள் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளில் பாலியல் சுரண்டல்வாதிகளைத் தவிர்ப்பதனை பால்நிலை சமத்துவமான சமூகத்தினைக் கட்டியெழுப்புவதற்கான அரசியல் அடிப்படையாகக் கைக்கொள்ள வேண்டும் என்பதனையும் நாம் வலியுறுத்துகின்றோம்.
Comments
Post a Comment