ஷோபாசக்தியின் பாலியல் சுரண்டல் தொடர்பான அறிக்கைக்கெதிரான அவரின் மறுப்பு தொடர்பில்: பொய்களைக் கட்டுடைத்தல்
பாலியல் சுரண்டல்களில் ஈடுபடுவோர் திட்டமிட்டவகையிலேயே பெண்களை தமது பாலியல் வேட்டைக்குப் பயன்படுத்துகின்றார்கள். இது வெறுமனே தனியொருவரினால் மேற்கொள்ளப்படும் எழுந்தமானமான செயற்பாடல்ல. இது பெண்களுக்கெதிரான கட்டமைப்புரீதியான வன்முறையின் பிரதிபலிப்பும் அதன் தொடர்ச்சியாகவும் இருந்துவருகின்றது. அந்தவகையில் பெண்களுக்கெதிரான பாலியல் சுரண்டல்களைச் சாத்தியப்படுத்தும் சூழலை உருவாக்குபவர்கள், பாலியல் சுரண்டலில் ஈடுபடுவோர், பாதிக்கப்பட்டவர்களின் குரல்களுக்கான பொதுமக்கள் கவனத்தினையும் செவிமடுத்தலையும் பல்வேறுபட்ட கட்டுக்கதைகள் மூலமாகவும் அப்பட்டமான பொய்களினடிப்படையிலும் இல்லாமற்செய்வோர், பாலியற் சுரண்டலில் ஈடுபட்டுவருபவர் தொடர்பில் அனுதாபத்தினை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவோர், அவருக்கான தளங்களை ஏற்படுத்திக்கொடுத்து அவரைத் தொடர்ந்து சாதாரணமயப்படுத்துவோர், இவ்வாறாக பெண்களுக்கெதிரான பாலியல் சுரண்டல் என்பது ஒரு சமூகக்கூட்டு வன்முறையாக, ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள்மீது இழைக்கப்படும் கட்டமைப்புரீதியான வன்முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. அந்தவகையில் இக்கட்டமைப்புரீதியான வன்முறைச் சுழற்சியினை உடைத்து, பாலியல் சுரண்டலில் ஈடுபடுபவர் உள்ளடங்களலாக அதன் தொடர்ச்சியினைப் பேணுபவர்களை வெளிப்படுத்தி, இயல்பாக்கம் செய்யப்பட்டிருக்கும் வன்முறைகளின் வடிவங்களை முறியடிப்பதனை நோக்காகக்கொண்டே பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கு மத்தியிலும், எமது அன்றாட வாழ்க்கைப் போராட்டங்களுக்கு மத்தியிலும் பெண்களாக, ஒடுக்கப்படுபவர்களாக எமக்கிருக்கும் நேரத்தினை மிகவும் வினைத்திறன்மிக்கவகையில் செயற்படுத்தி இச்செயல்வாதத்தினை தொடர்ந்து முன்னெடுத்துவருகின்றோம்.
அந்தவகையில் எமது அதற்கமை பெண்ணியக் குழுவினால் ஷோபாசக்தியின் பாலியல் சுரண்டல்களுக்கெதிரான கண்டன அறிக்கை வெளியிடப்பட்ட (ஏப்ரல் 14) அடுத்தநாளே (ஏப்ரல் 15) அவரின் மறுப்பு ‘கண்டன அறிக்கை : உண்மைகளும் பொய்களும்’ எனும் தலைப்புடன் வெளியிடப்பட்டிருந்தது. பொய்களாலான அம்மறுப்பினை கட்டுடைப்பதற்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு விடயமாக அணுகுவோம்.
இந்தக் குற்றச்சாட்டுகளை நான் முழுமையாக மறுக்கிறேன். எவரொருவர் மீதும் நான் மேலாதிக்கமோ பாலியல் சுரண்டலோ செய்ததில்லை. நம்பிக்கைத் துரோகம் சுட்டுப் போட்டாலும் – உண்மையாகவே துப்பாக்கியால் சுட்டாலும் – செய்வது என் இயல்பில்லை. உறவிலிருந்து பிரிந்த பின்பும் பலருடனும் நட்புரீதியான தொடர்புகளையும் சந்திப்புகளையும் இப்போதுவரை நான் வைத்திருக்கிறேன்.
- என்று பொறுப்பு கூறியிருக்கிறார் ஷோபாசக்தி.
பாலியல் சுரண்டலில் ஈடுபட்ட எவராவது இதுவரை தம்குற்றங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறார்களா? அது தமிழ்நாட்டு பிரபலம் கோணங்கியாகட்டும், பார்த்திபராஜாவாகட்டும், ஈழத்துத்தமிழ்ச்சூழலில் மு.மயூரனாகட்டும், யதார்த்தனாகட்டும், மஹிதரனாகட்டும், பா. நடேசனாகட்டும், ஐரோப்பிய சூழ்நிலையில் நீல் கைமன் ஆகட்டும், தனது முன்னாள் காதலிகளால் பாலியல் வன்முறையாளர் எனக் குற்றம் சாட்டப்பட்டு இந்த 2025 கேன்ஸ் திரைப்படவிழாவில் சிகப்பு கம்பளம் மறுக்கப்படட ஃபிரஞ்சு நடிகர் தியோவாகட்டும், இவர்களில் சிலர் ஒரு மறுப்பறிக்கை மட்டுமே வெளியிட்டு தம்மீதான குற்றச்சாட்டுக்களை மறுப்பதாகக் கூறினார்கள். ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிதொடர்பிலோ, அவர்களுக்கு அதனால் ஏற்பட்ட தாக்கங்கள் மற்றும் இழப்புக்கள் தொடர்பிலோ ஒரு துளி ஒத்துணர்வைத்தன்னும் வெளிப்படுத்தியிருக்கவில்லை. அந்தவகையில் ஷோபாசக்தி மட்டும் என்ன விதிவிலக்கா? ஆனால் எமது சமூகத்தின் அவலமும், சமூக நிறுவகங்களின் சீர்கேடும் எந்த அளவிற்கு இருக்கின்றதென்றால் பாலியல் சுரண்டல் பொதுவெளிக்கு வந்தபிறகு அதனை மறுத்து அறிக்கைவிட்டாலே அதனைப் பொறுப்புள்ள நடத்தையாகக் கருதுவதும், அவர் பாலியல் சுரண்டலில் ஈடுபடவில்லை என்பது நிரூபணமானதுபோலக் கொண்டாடுவதுமாகும். இத்தகைய சமூக அமைப்புக்களே பாலியல் சுரண்டல்களை தொடர்ந்து சாத்தியப்படுத்தும் தரகு வேலைகளை செய்துவருகின்றன.
ஷோபாசக்தியினால் பாதிக்கப்பட்ட மூவரால் வழங்கப்பட்ட வாக்குமூலங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை. தமிழ் வாசகர்களுக்காக தமிழ்மொழிபெயர்ப்பு வழங்கப்பட்டிருப்பினும் ஆங்கிலமே பிரதான மூலம் —என்பதைக் குறிப்பிட்டுக்கொள்கின்றோம்.
பாதிப்புக்குட்படுத்தப்பட்டவர் #1
வாக்குமூலம் #1
ஷோபாசக்தியைப் பற்றி நிறைய கேள்விப்பட்டதுண்டு. அவருடைய எழுத்தாளுமை பற்றி பல நண்பர்கள் சொல்லியிருக்காங்க. ஓரிரண்டு தடவை பொது வெளியில் சந்திச்சப்ப அந்த ஆச்சர்யத்தோடு தான் பேசினேன். ஒரு தடவை அவர் இந்தியா வந்தப்ப என்னுடைய தோழி அவரை நேர்ல பார்க்க அழைச்சிட்டுப் போனாங்க. ஒரு பெரிய ஆளுமையை சந்திக்கிற சந்தோசத்தில தான் போயிருந்தேன். அவர் தங்கியிருந்த airbnb அபார்ட்மெண்டில் நிறைய நண்பர்கள் இருந்தாங்க. அவருடைய பதிப்பாளர்கள் இரண்டு பேரும் எனக்கு தெரிந்த வேறு நண்பர்களும் கூட இருந்ததால ரொம்ப நேரம் பேசி சிரிச்சு மது அருந்திக்கிட்டு இருந்தோம்.அந்த வாரம் எனக்குப் பிறந்தநாள்னு நண்பர்கள் கிட்ட கேட்டு தெரிஞ்சிட்டு பலூன் கேக் எல்லாம் ஆர்டர் பண்ணி கொண்டாட்டமா மாத்தினது எனக்கு வெட்கமாகவும் அதே சமயம் மகிழ்ச்சியாவும் இருந்தது. எனக்குப் பெரிசா பரிச்சயம் இல்லாத நபர் அதுவும் ஒரு பெரிய ஆளுமை என் பிறந்தநாளைக் கொண்டாடினது ரொம்ப பெருமையா இருந்தது. நேரம் போக போக டான்ஸும் ஆடினோம். சின்ன வயசில இருந்து எனக்கு நடனம் பிடிக்கும். பிறந்தநாள் பரிசா கிடைச்ச புடவையை அன்னைக்கு கட்டியிருந்தேன். அதனால இன்னும் கூடுதல் சந்தோசத்தில ஆடினேன். என்னுடைய நடனத்தை ரொம்ப ரசிச்சாரு. செமையா ஆடறன்னு பாராட்டிட்டே என்னை இடுப்பில பிடிச்சாரு. எனக்கு ரொம்ப வித்தியாசமா, சங்கடமா இருந்தது. எல்லோர் முன்னாடியும் அவர் என்னை அப்படி கட்டிப்பிடிச்சதால தவறா எதுவும் இருக்காதுன்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டேன். கனடாவில ஒரு பெரிய இயக்குநர் திருநங்கை கதாபாத்திரத்தை மையமா வச்சு திரைப்படம் எடுக்கப் போவதாகவும் அதுல வேலை செய்ய எனக்கும் என் தோழிக்கும் வாய்ப்பு தருவதாகவும் சொன்னார். உதவி இயக்குநராகவும் சந்தர்ப்பம் அமைந்தால் திரைக்கு முன்னும் வேலை செய்யலாம் என்று எங்க இரண்டு பேரையும் கனடாவிற்கு அழைச்சார். இந்தியா விட்டு எப்படியாவது தப்பிச்சுப் போனால் போதும் என்ற நிலைமையில் இருந்தப்ப அவருடைய பேச்சு பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. இரண்டு நாள் பொறுத்து மீண்டும் என்னை அழைச்சார். இந்த தடவை என்னுடைய தோழி வரல. நான் மட்டும் தான் அவர் தங்கியிருந்த airbnb-க்குப் போனேன். அன்றும் வேறு நண்பர்கள் கூடியிருந்தாங்க. மது அருந்தினோம். இரவு கடந்துப் பேசிக்கிட்டிருந்தோம். கனடா இல்லன்னா ஐரோப்பாவில் பெண்கள் சந்திப்பிற்கு அழைப்பு விடுக்க ஏற்பாடு செய்யப்போவதாக சொன்னார். ஒருவர் பின்னாடி ஒருவர்னு நண்பர்கள் கிளம்பிப்போயிட்டாங்க. சிலர் சோர்ந்து தூங்கிட்டாங்க. இவர் என்கிட்ட நெருக்கமாக வந்து “நீங்க ரொம்ப வடிவா இருக்கீங்க” - ன்னு சொல்லி approach செய்தார். நான் freeze ஆயிட்டேன். எனக்கு துளியும் விருப்பமில்லை. தர்மசங்கடமாகி போச்சு. ஆனால் வாழ்க்கை நெருக்கடிகள், என் பாலினம் படற கஷ்டங்கள், பொருளாதார சூழல் போன்ற காரணங்கள் ‘வேண்டாம்’னு என்னை சொல்லவிடல. No சொன்னால் வரும் வாய்ப்பை நானே தட்டிவிடுவது போலாகிடுமோன்னுக் குழம்பி போனேன். உறவு கொண்ட ஒவ்வொரு நொடியும் force-ஆக No சொல்லி விலகி ஓடிடனும்னு தவிச்சேன். என்னால முடியல. எனக்கு அந்த privilege இல்லை. மனம் வெதும்பி என் தோழி கிட்ட இதைப் பகிர்ந்துக்கிட்டேன். எனக்கு hurting-ஆ இருந்துச்சு. பெண்கள் சந்திப்பிற்கு அவர் ஏற்பாடு செய்து அனுப்பியிருந்த invitation spam mail-க்கு போயிருந்ததை காலம் கடந்து கவனிச்சதால என்னால் பயன்படுத்திக்க முடியல. அந்த சம்பவத்திற்குப் பிறகு பல இடங்களில் அவரை சந்திக்கிற சூழல் இருந்தது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வெவ்வேறு பெண்களுடன் இருந்தார். என் கண் முன்னாடியே வேறப் பெண்களுடன் நெருக்கமாக இருந்ததும், அந்த இடத்திலேயே நான் இருந்தும் என்னை அவர் ஒரு பொருட்டாக கூட மதிக்கலங்கறதும் எனக்கு அருவருப்பாக இருந்தது. ஒரு தடவை அவரோடு ஒரே காரில் போக நேர்ந்தப்ப பின்சீட்ல இன்னொரு பெண்ணுடன், நான் பார்க்கிறேன் என தெரிஞ்சும் கூச்சமே இல்லாம, மிக நெருக்கமாக நடந்துக்கிட்டது எனக்கு அவமானமாகப் போயிடுச்சு. என்னோடு அவர் வலிய நெருக்கமாக இருந்த சம்பவத்தைப்பத்தி ஒரு வார்த்தை கூட பேசாததும், சின்ன sorry கூட கேட்காததும், என்னைப்பத்தி என்ன நினைச்சுக்கிட்டு இப்படி disposable போல நடத்துகிறார்னு மனம் கொதிச்சுப் போனேன். சில வருடங்கள் கழிச்சு, அவர் திரைக்கதை எழுதி நடித்த ரூபா படத்தை பார்க்க கிடைச்சுது. என்னோடு இருந்த தருணங்களை அப்படியே அதுல காட்சிப்படுத்தியிருந்தார்.
ஓ இதுக்குத்தான் என்னைப் பயன்படுத்தினாரான்னு அப்ப தான் உறைச்சது. அவர் கிட்ட நேரடியாக கேட்கவும் செஞ்சேன். ஆமாம் உன்னோடு இருந்தது தான் இன்ஸ்பிரேஷன்னு சொன்னார். அந்தப்படம் transphobic-ஆக இருந்தது ஏன் என்பதும் புரிஞ்சுது. நான் இதையெல்லாம் கடந்து ஒரு புதிய வாழ்க்கையில் இப்போது இருக்கிறேன். Abusive situations குறித்த நினைவுகளை மறக்கவே விரும்பறேன். ஆனால் ஷோபாசக்தியால் என்னை மாதிரியே வேறு பலரும் பாதிக்கப்பட்டிருப்பதும், மனச்சிதைவுக்கு உள்ளாகி தற்கொலை முயற்சி வரை போயிருக்கிறாங்கங்கறதும் தெரியவந்தப்ப, எனக்கு நடந்ததை பொதுவில் பேச முடிவெடுத்தேன்.
பாதிப்புக்குட்படுத்தப்பட்டவர் #2
வாக்குமூலம் #2
This is a deeply personal and sensitive narrative.
In 2017, Shobasakthi arrived in Chennai at the invitation of Bharatbala to play a lead role in a Tamil film, which was to be directed by a debut female filmmaker. However, Bharatbala became unresponsive after extending the invitation, leaving Shobasakthi stranded. The young director, despite her limited resources, took it upon herself to accommodate him. She bore the expenses for his stay at her office, provided his meals and drinks, and even drove him around the city. Late nights were often spent accompanying him to meet friends, which frequently involved drinking and disruptive behavior. This caused significant strain on her, including conflicts with her landlords, who were concerned about his presence in the building.
During this time, Shobasakthi expressed a desire to marry her and settle in France, promising to split his time between India and Tamil cinema. He made numerous assurances to gain her trust, even tying a discreet knot with her. However, his actions contradicted his words. He maintained physical relationships with other women and received calls from acquaintances he had made similar promises to.
When the film project fell through, Shobasakthi abruptly ended the relationship without providing closure, leaving the director heartbroken. The emotional toll was so severe that she reportedly attempted to take her own life. Despite her unwavering support during his hospitalization at Mehta Hospital, where he insisted on keeping his condition private, she continued to follow his instructions, often at great personal cost.
Shobasakthi's possessiveness further complicated matters. He discouraged her from pursuing other projects and threatened self-harm if she distanced herself from him. The entire ordeal left a lasting impact on her life and career.
மொழிபெயர்ப்பு
இது உணர்வுமிக்க தனிப்பட்ட வாழ்வு குறித்த பகிர்வு
2017 ஆம் ஆண்டில் ஒரு அறிமுக பெண் திரைப்பட இயக்குநர் இயக்கவிருந்த தமிழ்ப் படத்தில் முன்னணி வேடத்தில் நடிக்க தயாரிப்பாளர் பரத்பாலாவின் அழைப்பின் பேரில் ஷோபாசக்தி சென்னை வந்தார். அழைப்பை விடுத்த பரத்பாலா அதன்பிறகு தொடர்பிற்கு வரவில்லை. இதனால் ஷோபாசக்தி சிக்கலுக்குள்ளானார். பெண் இயக்குநரிடம் போதிய பொருளாதாரம் மற்றும் வாய்ப்பு வசதிகள் இல்லாதபோதிலும் அவரை தன்னுடன் தங்க வைத்தார். அதற்கான செலவுகளையும் ஏற்றுக்கொண்டார் . அவருக்கு உணவு மற்றும் மதுபானங்களை ஏற்பாடு செய்ததோடு அவரை தனது காரில் எல்லா இடங்களுக்கும் ஓட்டிச்சென்றார் . பெரும்பாலான நாட்கள் இரவு நேரங்களில் அவர் நண்பர்களை வரவழைத்து குடி விருந்து என கூட்டம் கூட்டியதாலும் மற்றவர்களுக்கு இடையூறு வரவழைக்கும் விதத்தில் நடந்துக் கொண்டதாலும் கடும் சங்கடங்களுக்கு உள்ளானார் . பெண் இயக்குனர் அவரது வீட்டு ஒனருடன் இதனால் பெரும் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருந்தது.
இந்த காலகட்டத்தில் ஷோபாசக்தி பெண் இயக்குநரைத் திருமணம் செய்துக்கொண்டு பிரான்சில் வாழ விரும்புவதாக சொன்னார். சர்வதேச சினிமா-தமிழ் சினிமாவிற்கிடையே தனது நேரத்தைப் பிரித்து வேலை செய்யப் போவதாக உறுதியளித்தார். அவருடைய நம்பிக்கையைப் பெற பல உறுதிமொழிகளை வழங்கியதோடு ரகசியமாகத் தாலியும் கட்டினார். ஆனால் அவரது செயல்களோ அவரது வார்த்தைகளுக்கு முற்றிலும் முரணாக இருந்தன. அவர் இயக்குநரோடு இருந்தபோதே அவரறியாமல் மற்ற பெண்களுடனும் உடல் ரீதியான உறவுகளை தொடர்ந்து வைத்துக் கொண்டதோடு அவர் வாக்குறுதிகள் தந்த மற்ற பெண்களின் தொலைபேசி அழைப்புகளையும் ஏற்றுக்கொண்டு தானிருந்தார்.
திரைப்பட வேலைகள் திட்டமிட்டபடி நடக்காமல் தோல்வியடைந்ததால் ஷோபாசக்தி எந்த காரணங்களையும் சொல்லாமல், பெண் இயக்குநரோடு ஏற்பட்ட உறவை ஒரு முடிவுக்கு கொண்டு வராமல் திடீரென உறவை முறித்துக் கொண்டார். இதனால் மனம் உடைந்த இயக்குநர் மனச்சிதைவுக்கு உள்ளாகி தற்கொலை செய்துக் கொள்ள முயன்றார். அதிகப்படியான குடியால் உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டு அவர் ஒருமுறை மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது மிக அக்கறையோடு தனது சக்திக்கும் மீறி அவரை முழுமையாக கவனித்துக் கொண்டார். அப்போதும் தனது உடல்நிலையைப் பற்றி ரகசியமாக வைத்திருக்க பெண் இயக்குனரிடம் வலியுறுத்தினார். அவருடைய அறிவுறித்தல்களின் படி நடந்துக் கொள்ள வேண்டி இருந்ததால் தனிப்பட்ட முறையில் பெரும் இழப்புகளைச் சந்தித்தார்.
ஷோபாசக்தியின் உடைமை உணர்வு(Posessiveness) விஷயங்களை மேலும் சிக்கலாக்கியது. வேறு வேலைகளைப் பார்க்க விடாமல் தன்னைச் சுற்றியே இயங்க வைப்பதோடு அவரிடமிருந்து சற்று விலகி இருந்தாலும் தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளப் போவதாக மிரட்டுவார். அவருடனான உறவு பெண் இயக்குநரின் வாழ்விழும் தொழிலிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு ஆழமான வடுக்களை தந்துவிட்டது.
பாதிப்புக்குட்படுத்தப்பட்டவர் #3
வாக்குமூலம் #3
I met Eswaran in July 2018 in Paris. Prior to that, the only thing I knew about him was his role in Dheepan. I did not know he was a writer nor went by the name Shoba Sakthi.
Our relationship began immediately and continued until June 2023. I told him from the very beginning that I would continue this relationship as long as it was monogamous and a plan to live together at some point. He assured me that he would not be seeing other women and that between July and November 2022 that he and I would live together. I also specifically told him that if he met anyone else that he wanted to be with, that he was free to go. But, as long as we were together that this was to be monogamous. This was our agreement from the beginning. And I, naively believed him. We made detailed plans as to where we would set up a home base once my children were older and on their own.
The relationship was tumultuous. He was emotionally manipulative, selfish and dictated the relationship. I take responsibility for my lack of self awareness during this relationship. I also deeply loved this man at one point and this prevented me from ending the relationship.
He was sexually aggressive and convinced me during our relationship that it was out of love or in his words “paasam.”
The last time I saw him, he drank excessively and asked hypothetically what I would do if his mother was to arrange a marriage for him in Jaffna.
He claims that he doesn’t prescribe to the concept of marriage, yet, on one our video calls he brought his nephews in and told that I was going to be his wife.
His claim to be in perfect health is a fallacy. He is on several medications for his diabetes, kidney and heart issues. This combined with his drinking has contributed to impotence. Which he continently blamed on me. Arguing that I was too emotional and that is what caused the impotence.
I met and stayed with his mother on several occasions. She told me that he neglects her and not to trust him.
In June 2023, I was told by someone I trust that he was seeing a woman in Chennai. When I asked him, he lied and asked if I was going to believe him or the village idiots. A year later, I spoke to him and he admitted that he lied and said “I am really sorry.”
I ended the relationship in June 2023 itself when I found out about this woman in Chennai since I told him from the beginning that I would not tolerate being in a relationship with him if he also wanted to see other women.
This man lacks basic human decency or any integrity. He used me as a trophy and would call his friends when I was with him and tell show them on video calls and say “look who I have with me.” This was always when he was drunk.
During an argument, I asked him whether he tortured all the women in his life like this. And threatened to call Leena to find out. He painted a picture of Leena as someone who would he jealous and would never speak with a girlfriend of his. That she would literally tell me to fuck off. The Leena he describe and the Leena I have come to know since our relationship ended are not the same. I now understand why he told me to be fearful of her.
Eswaran lied and manipulated the relationship to meet his own emotional, intellectual and sexual needs.
One has to have experienced an intimate relationship with this predator to understand how he manipulates another human’s love for his own benefit. It is easy to judge from the outside.
மொழிபெயர்ப்பு
நான் ஈஸ்வரனை(ஷோபாசக்தியின் பெயர்) ஜூலை 2018-இல் பாரிஸில் சந்தித்தேன். அதற்கு முன்பு, அவரைப் பற்றி எனக்குத் தெரிந்த ஒரே விஷயம் தீபன் திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் மட்டுமே. அவர் ஒரு எழுத்தாளர் என்பதும் ஷோபா சக்தி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார் என்பதும் எனக்கு அப்போது தெரியாது.
எங்கள் உறவு உடனடியாகத் தொடங்கி ஜூன் 2023 வரை தொடர்ந்தது. இந்த உறவு ஒருதார மணமாகவும் ஒன்றாக இணைந்து வாழும் ஏற்பாடாகவும் இருந்தால் மட்டுமே நான் தொடருவேன் என்று ஆரம்பத்திலிருந்தே அவரிடம் சொன்னேன். அவர் வேறு பெண்களைப் பார்க்க மாட்டார் என்றும், ஜூலை மற்றும் நவம்பர் 2022- க்கு இடையில் நானும் அவரும் ஒன்றாக வாழத்தொடங்குவோம் என்றும் அவர் எனக்கு உறுதியளித்தார். அவர் வேறு யாரையாவது சந்திக்க விரும்பினால், தாராளமாக விலகிச் செல்லலாம் ஆனால், நாங்கள் ஒன்றாக இருக்க வேண்டுமென்றால் அது ஒருதார மணமாக மட்டும் தான் இருக்க வேண்டும் என்பது எங்கள் ஒப்பந்தம். என் குழந்தைகள் பெரியவர்களாகி சென்றவுடன், எங்கு வீட்டை அமைத்துக் கொள்ளலாம், எங்கு குடும்பமாக வாழலாம் என்பது குறித்தெல்லாம் விரிவான திட்டங்களை வகுத்தோம். நான், அப்பாவியாக அவரை நம்பினேன்.
எங்கள் உறவு கொந்தளிப்பு மிக்கதாக இருந்தது. அவர் சூழ்ச்சிமிக்கவர். உணர்ச்சி ரீதியாகச் சுரண்டும் குணமுடையவர். சுயநலவாதி. உறவில் எப்போதும் ஆணையிடுபவராக இருப்பவர். இவருடனான உறவின் போது எனக்கு சுய விழிப்புணர்வு இல்லாததற்கு நான் பொறுப்பேற்கிறேன். ஒரு கட்டத்தில் நான் இந்த மனிதனை ஆழமாக நேசித்தேன், அதுவே உறவை முறித்துக் கொள்ளவிடாமல் என்னைத் தடுத்தது.
எங்கள் உறவின் போது, அவர் பாலியல் ரீதியாக மிக ஆக்ரோஷமாக இருந்தார். அது அன்பு மிகுதியால் என்றும் இன்னும் சொல்லப்போனால் அவரது வார்த்தைகளில் "பாசம்" என்றும் என்னை நம்ப வைத்தார்.
நான் அவரை கடைசியாகப் பார்த்தபோது, அவர் அளவுக்கதிமாக குடித்துவிட்டு, அவரது தாயார் யாழ்ப்பாணத்தில் அவருக்கு ஒரு திருமணத்தை ஏற்பாடு செய்தால் நான் என்ன செய்வேன் என்று கற்பனையாகக் கேட்டார். அவர் திருமணம் போன்ற நிறுவனங்களில் உடன்பாடில்லை என்று கூறுகிறார். ஆனால், எங்களிடையே நடந்த ஒரு வீடியோ அழைப்பில் அவர் தனது தங்கையின் மகன்களை அழைத்து, நான் அவரது மனைவியாகப் போகிறேன் என்று கூறி அறிமுகப்படுத்தினார்.
அவர் சரியான ஆரோக்கியத்துடன் இருப்பதாகக் கூறுவது ஒரு தவறான கருத்து. அவர் தனது நீரிழிவு, சிறுநீரகம் மற்றும் இதய பிரச்சினைகளுக்கு பல மருந்துகளை உட்கொள்கிறார். இது அவரது குடிப்பழக்கத்துடன் இணைந்து ஆண்மைக் குறைவுக்கு பங்களிக்கிறது. அதற்கும் அவர் என் மீதே பழி போட்டார். நான் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறேன் என்பது தான் அவரது ஆண்மைக் குறைவுக்குக் காரணம் என்று வாதிட்டு என் மீது குற்றம் சுமத்தினார்.
நான் அவரது தாயாரை பல சந்தர்ப்பங்களில் சந்தித்து இலங்கையில் அவரோடு தங்கினேன். ஷோபாசக்தி தன்னைப் புறக்கணிக்கிறார் என்றும் அவரைத் தான் நம்பவில்லை என்றும் அவருடைய தாயார் என்னிடம் சொன்னார்.
ஜூன் 2023 இல், என நம்பிக்கைக் குரிய ஒருவர், ஷோபாசக்தி சென்னையில் ஒரு பெண்ணோடு நெருக்கமாக இருக்கிறார் என்று என்னிடம் கூறினார். நான் அவரிடம் அதுகுறித்து விசாரித்தபோது மறுத்தார். நான் அவரை நம்பப் போகிறேனா அல்லது கிராமத்து முட்டாள்களை நம்பப் போகிறேனா என்று என்னைக் கேட்டார். ஒரு வருடம் கழித்து, மீண்டும் அந்த பிரச்சனை எழுந்தபோது, வேறு வழியில்லாமல் அவர் பொய் சொன்னதாக ஒத்துக் கொண்டு "I am sorry" என்றார்.
ஜூன் 2023-இல் சென்னையில் அவர் நெருக்கமாக இருந்த பெண்ணைப் பற்றி எனக்குத் தெரியவந்தபோது, நான் உறவை முறித்துக் கொண்டேன். மற்ற பெண்களைப் பார்க்க விரும்பினால், அவருடன் உறவில் இருப்பதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்று ஆரம்பத்திலிருந்தே நான் உறுதியாக இருந்ததையும் அவரிடம் நினைவுறுத்தினேன்.
இந்த மனிதனுக்கு அடிப்படை மனித ஒழுக்கமோ அல்லது நேர்மையோ இல்லை. அவர் என்னை ஒரு கோப்பையாகப் பயன்படுத்திக் கொண்டார். நான் அவருடன் இருக்கும்போது அவரது நண்பர்களை அழைத்து வீடியோ அழைப்புகளில் அவர்களைக் காட்டி "என்னுடன் யார் இருக்கிறாள் என்று பாருங்கள்" என்று கூறுவார். அவர் குடிபோதையில் இருந்தபோதெல்லாம் இது நடந்தது.
ஒரு வாக்குவாதத்தின் போது, அவர் தனது வாழ்க்கையில் இருந்த பிற பெண்களையும் இப்படி சித்திரவதை செய்தாரா என்று கேட்டேன். அதைக் கண்டுபிடிக்க லீனாவை அழைத்துப் பேசப் போவதாக விளையாட்டாக மிரட்டினேன். லீனா உடைமை உணர்வு மிக்கவர் எனவும் ஒருபோதும் என்னுடன் பேச மாட்டார் எனவும் ஒரு சித்திரத்தை வரைந்தார். என்னை fuck off சொல்லிவிடுவாள் என தட்டிக் கழித்தார். ஆனால் அவர் விவரிக்கும் லீனாவும், எங்கள் உறவு முறிந்ததிற்குப் பிறகு நான் அறிந்த லீனாவும் ஒன்றல்ல. லீனாவைப் பார்த்து பயந்திருக்கச் சொன்னது ஏன் என்று இப்போது எனக்குப் புரிகிறது.
ஈஸ்வரன் பொய்கள் பல சொல்லி, தனது சொந்த உணர்ச்சிசார், அறிவுசார், பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்ய எங்கள் உறவைப் பயன்படுத்திக் கொண்டார் என்பது தான் உண்மை.
இந்த சுரண்டல் பேர்வழியின் தந்திரோபாயங்களைக் குறித்தும், அவர் தனது சொந்த நலனுக்காக சக மனிதர்களின் அன்பை எவ்வாறு துஷ்பிரயோகம் செய்கிறார் என்பதைக் குறித்தும் முழுமையாகப் புரிந்துக்கொள்ள அவருடன் நெருங்கிப் பழகியிருக்க வேண்டும். வெளியில் இருந்து தீர்ப்பு சொல்வது மிக எளிது.
………………………………………..
இந்த வாக்குமூலங்கள் ஷோபாசக்தியின் மறுப்பறிக்கை ஒரு பெரிய பொய்மூட்டை என்று நிறுவப் போதுமானவை என்றாலும், ஆரம்பித்த கட்டுடைப்பை முடிப்போம்.
ஷோபாசக்தி தனது மறுப்பு அறிக்கையின் ஆரம்பத்தில் இவ்வாறு கூறுகின்றார்.
இந்த அறிக்கையில் கையொப்பமிட்டிருப்பவர்களில் முக்கால்வாசிப் பேர்களை நான் முன்பின் அறிந்ததில்லை. அவர்களுக்கும் என்னைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர்களில் பெரும்பாலானோர் கேரளா – டில்லி – வங்காளம் போன்ற இடங்ளைச் சேர்ந்தவர்களாகத் தெரிகிறார்கள். அறிக்கையில் கையொப்பமிட்டிருக்கும் மிகுதிக் கால்வாசிப் பேர்களில் பெரும்பாலானோரை எப்போதாவது இலக்கியக் கூட்டங்களில் அல்லது புத்தகச் சந்தையில் பார்த்திருப்பேன். அவ்வளவே அறிமுகம்.
தனது அறிக்கையின் முடிவில் அதற்கு முற்றிலும் மாறானதோர் தகவலைப் பதிவிடுகின்றார்
என்னைத் தனிமைப்படுத்திச் சமூகப் புறக்கணிப்புச் செய்வது, என்னோடு தோழமை பாராட்டும் இயக்கங்களிலிருந்து என்னைப் பிரித்துவைப்பது, என்னைக் குறித்து எழுதும் ஊடகவியலாளர்களைத் தடுப்பது, எனது பதிப்பக வாய்ப்புகளைக் கெடுப்பது, என்னைத் தேடி வந்துகொண்டேயிருக்கும் சர்வதேச அளவிலான சினிமா வாய்ப்புகளுக்கு வேட்டு வைப்பது என்பவைதான் கண்டன அறிக்கையின் மைய நோக்கம்.
அறிக்கையின் மையநோக்கம் அதுவாக இருப்பின் இவரின் கருத்துப்படி இவரை அறிந்திராத பெண்ஆளுமைகள், செயற்பாட்டாளர்கள் இவருக்கெதிராகக் கையொப்பமிடவேண்டிய தேவை என்ன? கையொப்பமிட்டிருக்கும் அனைத்துப் பெண்களுக்கும் இவர் கற்பனைசெய்வதுபோல என்ன தனிப்பட்ட கோபம் அல்லது பொறாமை இவர்மீது இருந்துவிடப்போகிறது. இவரைத்தனிமைப்படுத்துவதனால் அவர்களுக்கென்ன நன்மை நேர்ந்துவிடப்போகின்றது? மாறாக, கையொப்பமிடும் முன்பு இந்த விடயம் தொடர்பில் தீரவிசாரித்து, ஆய்ந்தறிந்தது இப்பாலியல் சுரண்டலின் தீவிரம்குறித்த தெளிவுடனும், புரிதலுடனும் அறிக்கையிலுள்ள விடயம் குறித்த உணர்வுரீதியான ஒன்றிப்புடனுமே இப்பெண்கள் கையொப்பமிட்டிருக்கின்றனர்.
இலக்கியம், சினிமா போன்ற துறைகளில் மட்டுமல்லாது வேறுபட்ட பல துறைகளையும் சேர்ந்த பெண்கள் இவ்அறிக்கையில் கையொப்பமிட்டிருக்கின்றார்கள். அறிக்கை உருவாக்கும் செயன்முறையில் வெவ்வேறுபட்டவிதத்தில் இதில் கையொப்பமிட்டவர்களில் பலர் பல கேள்விகளை எழுப்பி அதற்கான பதில்களைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். அத்துடன் தம்மால் முடிந்தவரை பங்களிப்பினைச் செய்து, இவ் அறிக்கையினைச் செம்மைப்படுத்தியிருக்கிறார்கள். அதனடிப்படையிலேயே பாலியல் சுரண்டல்களுக்கெதிரான ஒரு கூட்டுஎதிர்ப்பாக இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
உண்மையில் கையொப்பமிடுவதென்பது ஒரு ஒடுக்குமுறைக்கெதிரான ஒன்றிணைதலைக் குறிப்பிடுகின்றது, பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளிப்படுத்தாமல் அவர்களுடன் நாமும் உடனிருக்கிறோம், அவர்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகளைக் கூட்டாக கேள்விக்குட்படுத்துவோம் அதன்மூலம் எம்மைத்தனிமைப்படுத்தி வீழ்த்தும் ஆணாதிக்க அடக்குமுறை சக்திகளை முறியடித்து, பெண்களுக்கெதிரான பாலியல் சுரண்டல்களை ஒழிக்க எம்மால் முடிந்தவரை உழைப்போம் என்பதே அதன் நோக்காகும்.
ஒரு பொய்யை எப்படி கட்டமைக்கிறார் என்பதை பார்ப்போம்;
அதேவேளையில், கண்டன அறிக்கையில் கையொப்பமிட்டிருப்பவர்களில் ஒருசிலர் என்னோடு இணைந்து பல வருடங்களாகக் கலை – அரசியல் செயற்பாட்டிலும், நெருங்கிய நட்பிலும் உறவிலும் தோழமையிலும் இருந்தவர்கள். இவர்களிடம் என்னுடைய அலைபேசி எண்ணும் மின்னஞ்சல் முகவரியும் இருக்கின்றன. இவர்களில் பலர் இந்த விநாடிவரை எனது முகநூல் நட்புப் பட்டியலிலும் இருக்கிறார்கள். ஆனால், இவர்களில் ஒரே ஒருவருக்குக்கூட கண்டன அறிக்கையில் கையெழுத்திட முன்பாக என்னிடம் எனது தரப்பு விளக்கத்தைக் கேட்டு அறிய வேண்டும் என்று தோன்றவில்லை. முதலாளித்துவ நீதிமன்றங்களில் கூட குற்றம் சாட்டப்பட்ட தரப்புக்கு விளக்கமளிக்கப் பல வாய்ப்புகளைக் கொடுத்த பின்பே தீர்ப்பிடுகிறார்கள். ‘அதற்கமை பெண்ணியக் குழு’வின் விசாரணை மன்றத்திலோ அவ்வாறான வாய்ப்புகள் ஏதும் கொடுக்கப்படாமல், நேரடியாகவே ‘குற்றவாளி’ எனத் தீர்ப்பிடும் நடைமுறை அமலில் இருக்கலாம். ஆனாலும், நான் எனது தரப்பைச் சொல்லித்தான் ஆகவேண்டும்.
இவ்வாறு கூறுவதன்மூலம் ஷோபாசக்தி தன்னை அப்பாவியாகவும், தனக்கு நீதியும், ஜனநாயகமும் மறுக்கப்பட்டதாகவும் பாவனை செய்கிறார். ஆனால் உண்மைக்கு முன் பொய்களால் தாக்குப்பிடிக்க முடியாது என்பதை ஷோபாசக்தி போன்ற பாலியல் சுரண்டல்களில் ஈடுபடுவோர் உணரும் காலம் தொலைவில் இல்லை. இவரின் இப்பொய்க்கு ஆதாரமாக 2022ம் ஆண்டிலேயே லீனா மணிமேகலையினால் இவருக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலைக் கீழே காண முடியும்.
இந்த மெயிலுக்கு ஷோபாசக்தியிடமிருந்தோ, அவருடைய குழாமிடமிருந்தோ இன்று வரை எந்த பதிலும் வரவில்லை.
அதுதவிர வேறுசிலரும் இவருடனும் இவர் சார்ந்தோருடனும் தொலைபேசிவாயிலாகவும் நேரிலும் இதுகுறித்து பேசியபோதெல்லாம் பாதிக்கப்பட்ட பெண்களைக் குற்றஞ்சாட்டி அவர்கள் தன்னை நிறுவனமயப்படுத்த முனைகிறார்கள், பொய்சொல்கிறார்கள் எனப்பல்வேறுபட்ட குற்றங்களைச் சாட்டி விடயத்தினைத் தட்டிக்கழித்து வந்துள்ளாரேதவிர எந்தவொரு நேரத்திலும் பொறுப்புக்கூறலினை மேற்கொள்ளவில்லை. உண்மையில் இந்த பொதுவெளிப்படுத்தலே குறைந்தபட்சம் பொய்களால் ஆனதொரு மறுப்பையாவது அவரை எழுதுவதற்குத் தூண்டியுள்ளது. அதுதவிர ஒரு எழுத்தாளனாக அவரது பக்கத்தினைக் கூறுவதற்கான வெளி அவருக்கு இல்லையென்று புலம்புவது நகைப்பிற்குரியது.
அடுத்ததாக ஷோபாசக்தியின் DISCLAIMER- ஐ கவனிப்போம்;
‘எவரையும் அவதூறு செய்வதோ, குணச்சித்திரப் படுகொலை செய்வதோ, கடந்தகால உறவுகளின்போது நிகழ்ந்த தனிமனித அந்தரங்கங்களையோ, உணர்வுச் சிக்கல்களையோ, முரண்களையோ பொதுவெளியில் அறிக்கையிட்டு, கீழ்மையான கிசுகிசுப் பசி பிடித்து அலையும் சமூக வலைத்தளவாசிகளுக்கு மலிவுத் தீனி போடுவதோ எனது பதிவில் நிகழவே கூடாது என்ற கவனத்துடனும் பொறுப்புடனுமே இதை எழுதுகிறேன்.’
ஆயினும் அவரின் எழுத்துக்களுக்கும் செயல்களுக்கும் இருக்கும் முரண்களைப்போலவே இம்முறையும் ஒரு பொதுவான கூட்டுமுயற்சியினை தனிநபர்சார் பிரச்சனையாக முன்னிலைப்படுத்துவதன்மூலம் அறிக்கை பேசவிழையும் அரசியலினைப் புறந்தள்ளி ஆணாதிக்க கூட்டுச்சூழ்ச்சியின் அம்புகளை அவரது மறுப்பில் பெயரிடப்பட்டிருக்கும் பெண்கள்மீது ஏவியிருக்கின்றார். அவரின் மறுப்பில் பெயரிடப்பட்ட பெண்களை எதிராளிகளாக முன்னிறுத்தி அப்பெண்களை அவதூறு செய்து, குணச்சித்திரப் படுகொலை செய்வதே அவரின் நோக்காக இருந்திருக்கின்றது. அதனூடாக அவர்மீது கூறப்பட்டுள்ள பாலியல் சுரண்டல் தொடர்பான வாக்குமூலங்களின் கவனக்கோருதலை இல்லாதொழித்து இப்பிரச்சனையினைத் தனிப்பட்ட பிரச்சனையாகக் கட்டமைக்க முயன்றிருக்கின்றார். ஆயினும், ஆணாதிக்கத்தின் தொடர் வன்முறைகளை ஓர்மத்துடன் எதிர்க்கத் துணிந்த நாம், உண்மைக்காகவும் நீதிக்காகவும் பொறுப்புக்கூறலுக்காகவும் தொடர்ந்தும் குரல்கொடுப்போம்.
அதுதவிர இதற்கமை பெண்ணியக் குழுவின் நோக்கமாக ஷோபாசக்தி வரையறுக்கின்ற வற்றினை,
என்னைத் தனிமைப்படுத்திச் சமூகப் புறக்கணிப்புச் செய்வது, என்னோடு தோழமை பாராட்டும் இயக்கங்களிலிருந்து என்னைப் பிரித்துவைப்பது, என்னைக் குறித்து எழுதும் ஊடகவியலாளர்களைத் தடுப்பது, எனது பதிப்பக வாய்ப்புகளைக் கெடுப்பது, என்னைத் தேடி வந்துகொண்டேயிருக்கும் சர்வதேச அளவிலான சினிமா வாய்ப்புகளுக்கு வேட்டு வைப்பது என்பவைதான் கண்டன அறிக்கையின் மைய நோக்கம்.
இதைத்தான் இதுவரை அவரும் அவரின் சகபாடிகளும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் அவர்களுக்கு ஆதரவானோருக்கும் செய்துவந்திருக்கின்றனர். அதனாலேயே இலகுவாக அறிக்கையின் நோக்கத்தினைத் திசைதிருப்புவதற்கு இவற்றினை முன்வைக்கவிழைகிறார் ஷோபாசக்தி .
கடந்த வருடம் பாரிஸில் நடந்த 51-வது இலக்கியச் சந்திப்பில் ‘பாலியல் சுரண்டல்: எதிர்கொள்ளலும் பொறுப்புக்கூறலும்’ என்றொரு அமர்வு நிகழ்ந்தது. அந்த அமர்விலும் தமிழச்சி என்மீது வைத்த பாலியல் குற்றச்சாட்டுக் குறித்த கேள்வி மறுபடியும் ஒருமுறை எழுப்பப்பட்டது. அமர்வை ஒருங்கிணைத்த விஜி அந்தக் கேள்விக்கு “தமிழச்சியின் குற்றச்சாட்டு ஒரு பொய்யான குற்றச்சாட்டு என்பது எங்களுக்குத் தெரியும்” எனப் பதிலளித்தார். அதாவது, நீண்ட பதினைந்து வருடங்கள் நான் பொய்ப் பழியைச் சுமந்து அலைந்ததன் பின்னாக, முதற்தடவையாக ஒரு பொது அரங்கில் என்மீதான குற்றச்சாட்டுப் பொய்யானது எனச் சொல்லப்பட்டு, அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், அதுவரை காலமும் தமிழச்சியின் இந்தப் பொய்க் குற்றச்சாட்டைத் தோன்றியபோதெல்லாம் தங்களது கையிலெடுத்து என்மீது அவதூறை வீசியெறிந்தவர்களும் தற்போதைய இந்தக் கண்டன அறிக்கையில் கையழுத்திட்டிருப்பவர்களுமான மோகனதர்ஷினி, பாரதி சிவராஜா, அஞ்சனா போன்றோர் தங்களது அந்த அவதூறுகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்களா என்ன! இல்லை. இப்போதும் அந்த அவதூறுகள் முகநூலில் கிடக்கின்றன.
இந்த விடயத்தை இரண்டு விதமாக அணுகமுடியும். ஒன்று ஷோபாசக்தியைப் பொறுத்தவரை நம்பிக்கைக்குரிய விஜி கடந்தவருடம் தமிழச்சியின் குற்றச்சாட்டு பொய்யென்று கூறியிருந்தால்கூட, அத்தகைய நம்பிக்கைக்குரிய விஜிதான் இன்று பாதிக்கப்பட்ட பெண்களின் கதைகளை அறிந்து மிகவும் ஏமாற்றத்துடனும், ஷோபாசக்தி மீதான நம்பிக்கை முற்றுமுழுதாக உடைந்துபோன நிலையில் அறிக்கையில் கையொப்பமிட்டு தனது கூட்டிணைவினை வெளிப்படுத்தியுள்ளார். ஆக அன்று விஜி தமிழச்சி பொய் கூறினார் எனக்கூறுவதை ஏற்றுக்கொள்ளும் ஷோபாசக்தி யினால் இன்று உண்மையிலேயே ஷோபாசக்தி பல பெண்களைப் பாலியல் சுரண்டல் செய்தார் என்பதனை ஏன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை? ஷோபாசக்தியுடன் பல்லாண்டு கால நட்பிலிருந்த விஜி கடந்த ஒரு வருடத்திற்குள் இவர்மீதான தனது அபிப்பிராயத்தினை மாற்றிக் கொள்ளுமளவிற்கான தனிப்பட்ட கோபங்கள் ஏதேனும் இருந்திருந்தால் ஷோபாசக்தி அதனை வெளிப்படுத்தாமல் இருந்திருக்க வாய்ப்பில்லையல்லவா. அதுதவிர இதுவரை தான் நம்பிய ஒருவர் தனது நம்பிக்கைக்குப் பாத்திரமற்றவர் எனவும் உண்மையிலேயே தொடர்ச்சியாகப் பெண்களை பாலியல் சுரண்டல் செய்பவர் எனவும் தெரியவரும்போது தன்நலத்திற்காக அவரை மூடிமறைத்துப் பாதுகாக்கும் பலருக்கு மத்தியில் தனது நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றத்தினைச் சற்றும் தயங்காமல் பொதுவெளியில் முன்வைத்திருக்கும் விஜியின் செயற்பாடு ஒரு முன்னுதாரணமாகவே கருதப்பட வேண்டும்.
அதுதவிர விஜியின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்தாகவே இருந்தது. இது இலக்கியச் சந்திப்பில் இருந்த வேறு பெண்களது கருத்தோ அல்லது அதற்கு வெளியிலிருந்து தார்மீக ஆதரவு வழங்கிய பெண்களது கருத்தோ அல்ல. அவ்வாறிருக்க, மோகனதர்ஷினி , அஞ்சனா மற்றும் பாரதி போன்றோர் ஏன் அவர்களது நிலைப்பாட்டினை மீளப் பெறவேண்டும்? விஜியின் கருத்தினடிப்படையில் ஏனைய பெண்கள் தமது நிலைப்பாட்டினை மேற்கொள்ள வேண்டுமெனக் கோருவது எத்தகைய அபத்தமானது? இதுவரை காலமும் பாலியல் சுரண்டல்களில் ஈடுபட்டவர்களும் ‘அவதூறு’ என்ற திரையின்பின் தான் ஓடி ஒளிந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ளப் பார்த்தார்கள். ஷோபாசக்தியும் அதே தந்திரோபாயத்தைப் பயன்படுத்துவது ஆச்சரியமளிக்காத ஒன்றுதான்.
பகிரங்கமான ஓர் அரசியல் நிகழ்வுக்கு எதிராக, அதிகார அடக்குமுறைகளுக்கு எதிராக இந்தமுறையில் ஒரு கூட்டுக் கண்டன அறிக்கை வெளியாவதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். அதுதான் நடைமுறை. ஆனால், உறவிலிருந்த இரு நபர்களுக்கு இடையேயான அந்தரங்கப் பிரச்சினைகளையும் உணர்வுச் சிக்கல்களையும் ஒருதரப்பின் மீதான Solidarity என்ற அடிப்படையில் மட்டுமே அணுகிக் கையெழுத்திடுவது ஒருபோதும் சரியாக இருக்காது.
தனது மறுப்பில் இவ்வாறுகூறும் ஷோபாசக்தி ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்பு யதார்த்தனின் பாலியல் சுரண்டல் தொடர்பான பொதுவெளி உரையாடல்களின்போது Me too எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களைத் தொகுத்து எவ்வாறு அறிக்கையாக வெளியிடவேண்டும் என்பதுகுறித்து பின்வருமாறு விளக்கமளிக்கின்றார்.
அந்தவகையில் வெளிவந்திருக்கும் அறிக்கை அவரின் வழிகாட்டுதலுக்கு இணங்கவே வந்திருக்கின்றது. இன்று அது செல்லாது என ஷோபாசக்தி ஒற்றைக்காலில் நிற்பது அவரின் போலித்தனத்தினையும் இரட்டைநிலைப்பாட்டினையுமே அம்பலப்படுத்துகின்றது.
இந்த அறிக்கை யாரால் எழுதப்பட்டது என்பது தொடர்பில் கூறுகையில் ஷோபாசக்தி பின்வருமாறு கூறுகின்றார்.
சிவா மாலதி கடந்த டிசம்பர் மாதத்தில் எந்தச் சூழ்நிலையில், என்னமாதிரியான குற்றச்சாட்டை என்மீது வைத்தார் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது. 51-வது இலக்கியச் சந்திப்பில் ‘இமிழ்’ தொகுப்பு வெளியீடு, யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த ‘இமிழ்’ வெளியீட்டு நிகழ்வுக்கு எழுத்தாளர் கிரிசாந் பேசுவதற்கு அழைக்கப்பட்டது தொடர்பான விவாதங்களில் ‘இமிழ்’ தொகுப்பின் பதிப்பாசிரியர்களில் ஒருவன் என்ற முறையில் எனது நிலைப்பாட்டை ‘இமிழ் – வால்டேயரை நினைவுபடுத்தல்’ என்ற தலைப்பில் கட்டுரையாக (Link) எழுதியிருந்தேன். கிரிசாந் எழுதிய கட்டுரைகள் மீது எதிர்க் கருத்து இருப்பதற்காக அவரைச் சமூகப் புறக்கணிப்புச் செய்யுமாறு (சிவா மாலதி போன்றோர்) கோருவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லியிருந்தேன்.
இந்த மறுப்பினை வாசிக்கும் யாதொருவருக்கும் ஒரு கட்டுரைமீதான எதிர்க்கருத்திற்காக ஒருவரை சமூகநீக்கம் செய்யக் கோருவார்களா எனும் கேள்வி எழுவதையும், ஷோபாசக்தியின் தர்க்கத்தில் எவ்வித அடிப்படையும் இல்லாதிருப்பதையும் உணராமல் இருக்கமுடியாது. இருந்தாலும் இங்கு ஷோபாசக்தி மறைக்கும் பல விடயங்களையும், அவரின் பொய்களையும் அம்பலப்படுத்த வேண்டியுள்ளது.
சிவா மாலதிக்கும் கிரிசாந்திற்கும் இடையில் இருப்பது வெறுமனே ஷோபாசக்தி பொய்யுரைத்து மூடிமறைப்பதுபோல கட்டுரைகள் மீதான எதிர்க்கருத்துக்களல்ல என்பதையும், ஆரம்பத்திலிருந்தே இவை தெளிவாக விதைகுழுமத்தினரான யதார்த்தன் மற்றும் மஹிதரனின் பாலியல் சுரண்டல்கள் பற்றியவையும், அவற்றிற்கு உடந்தையாக இருந்து அவர்களைச் சாதாரணமயப்படுத்திக்காத்து வந்ததுமட்டுமன்றி விதைகுழுமத்தின் பெயரால் பாரிய நிதிமோசடியில் ஈடுபட்ட கிரிசாந் பற்றியதுமாகும். எனவே கீழ்வரும் ஷோபாசக்தியின் கூற்று ஒரு அப்பட்டமான பொய்யென்பதனையும், அது தொடர்பான மேலதிக தகவல்களையும் கீழுள்ள இணைப்பிலுள்ள பதிவினை வாசிப்பவர்கள் புரிந்துகொள்ள முடியும்.
https://www.facebook.com/share/p/1643Ch2wm1/?mibextid=wwXIfr
அந்தப் பதிவில், என்னால் பல பெண்கள் தொடர்ந்தும் பாதிக்கப்படுவதாகவும் என்னால் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்கள் என்றும் சிவா மாலதி குறிப்பிட்டார். தற்கொலைக்கு முயன்றதாக ஒரு பெண்ணின் அடையாளத்தைக் குறிப்பிட்டே எழுதியிருந்தார். சிவா மாலதி குறிப்பிடும் அந்தப் பெண் யார் என்பதை என்னைப் போலவே பலராலும் புரிந்துகொள்ள முடியும். ஏனெனில், எனக்கும் இங்கே குறிப்பிடப்படும் அந்தத் தோழிக்கும் இருந்தது இரகசிய உறவல்ல. அது பகிரங்கமாகவே இருந்தது.
சிவா மாலதி இந்தக் குற்றச்சாட்டை வைப்பதற்கு முன்பும் பின்பும் கூட அந்தத் தோழி என்னுடன் நல்ல நட்பிலேயே இருந்தார். சிவா மாலதியின் இந்தக் குற்றச்சாட்டு வெளியாகி இரண்டு வாரங்களுக்குப் பின்பு, என்னால் தற்கொலைக்குத் தூண்டப்பட்டதாகச் சொல்லப்பட்ட அந்தத் தோழி என்னைச் சந்திப்பதற்காகச் சென்னைப் புத்தக சந்தைக்கு வந்திருந்தார். இருவரும் நீண்ட நேரமாகப் பல விஷயங்களைப் பேசிக்கொண்டாலும், சிவா மாலதியின் பதிவு குறித்து நான் எதுவும் அவரிடம் சொல்லவில்லை. ஏனெனில், அந்தப் பொய்ச் செய்தியைச் சொல்லி அந்தத் தோழியைப் பதற்றப்படுத்த நான் விரும்பவில்லை. அன்று தில்லையின் ‘தாயைத்தின்னி’ நாவலை நான் புத்தக சந்தையில் வெளியிடுவதாக இருந்தது. நீங்களும் வாருங்கள் என அந்தத் தோழியையும் என்னுடன் அழைத்துச் சென்றேன். நானும் அவரும் சேர்ந்திருந்தே ‘தாயைத்தின்னி’ நாவலை மிகுந்த மகிழ்ச்சியோடு வெளியிட்டோம். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் (29 டிசம்பர் 2024) இப்போதும் தில்லையின் முகநூலில் இருக்கின்றன. என்னால் தற்கொலைக்குத் தூண்டப்பட்ட ஒருவர் இவ்வாறு நடந்துகொள்வது சாத்தியமா? இந்தத் தற்கொலைப் பொய் தற்போது வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையிலும் வெளியாகியுள்ளது.
இங்கும் ஷோபாசக்தி மற்றுமொரு அப்பட்டமான பொய்யினையே கட்டவிழ்த்திருக்கின்றார். பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை முயற்சியினை மேற்கொண்டது 2018ம் ஆண்டு. அப்போதிருந்தே இவருடன் தவிர்க்கமுடியாத காரணத்தினால் தொழில்ரீதியான மேம்போக்கான உரையாடல்களை வருடாந்தம் ஒன்று அல்லது இரண்டு தடவைகள் அப்பெண் பேணியிருந்திருக்கிறார்.
வருடாந்தம் புத்தகக் கண்காட்சிக்குச் செல்லும் அப்பெண் தனது உறவினரொருவருடன் இந்த வருடமும் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருக்கின்றார். அங்கு தற்செயலாக அவரைச் சந்தித்த ஷோபாசக்தி தனது மறுப்பில் கூறியுள்ளதைப்போன்று சிவா மாலதி ‘அப்பெண்ணின் தற்கொலை தொடர்பில் எழுதிய விடயங்களை மறைத்து, அப்பெண்ணுடன் பேசமுயற்சித்திருக்கிறார். சிவா மாலதியின் அப்பதிவைப்பற்றிக் கூறினால் அப்பெண் விழிப்படைந்து இவருடன் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளக்கூடும் என்பதை அறிந்த ஷோபாசக்தி அதைத்திட்டமிட்டு மறைத்து அவரைப் புத்தக வெளியீட்டிற்கு அழைத்துச்சென்றிருக்கின்றார். ஷோபாசக்தி கூறுவதுபோலவே பலரும் அப்பெண்ணை அறிந்திருந்ததனால் அவரும் பொது இடத்தில் இங்கிதமாக நடந்துகொண்டிருந்திருக்கிறார், மறுக்கமுடியாத நிலையில் புத்தக வெளியீட்டிற்குச் சென்றிருக்கிறார். அதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திய ஷோபாசக்தி புத்தகவெளியீட்டின்போது குழுவாகச் சேர்ந்து அவருடன் எடுத்த புகைப்படங்களையே இன்று சுட்டிக்காட்டுகின்றார். ஆக, தற்கொலை முயற்சி செய்த ஒருவர் நிச்சயமாக இவ்வாறு நடந்து கொள்ள முடியும். வற்புறுத்தல், பொது வெளி நாகரீகம், அதுதவிர ‘மீண்டுவிட்டேன் நீயொரு பொருட்டேயல்ல’ என்பதை வெளிப்படுத்தும் உளவியல் போன்ற பல காரணிகள் அதில் செல்வாக்கு செலுத்தியிருக்கக் கூடும். அந்தவிதத்தில் பாதிக்கப்பட்ட அப்பெண் சென்னைப் புத்தகச் சந்தைக்குத் தன்னைப் பார்ப்பதற்காக வந்திருந்தார் என்பதும் அப்பட்டமான பொய். உண்மையில் அப்பெண் இவரைப் பார்ப்பதற்காக வந்திருந்தார் என்பதை ஷோபாசக்தியினால் நிரூபிக்க முடியுமா?
அவரின் மறுப்பின் பிற்பகுதியிலும் ஷோபாசக்தி இவ்வாறு கூறுகின்றார்:
ஏற்கனவே என்னில் கோபமுற்றிருந்த சிவா மாலதி போன்றவர்களும் இவரோடு சேர்ந்துகொள்ள, இப்போது அவை எல்லாமே புனைவுகளாகவும் பொய்களுமாகச் சேர்ந்து மூன்றரைப் பக்கங்களில் கண்டன அறிக்கையாகப் பரிணமித்திருக்கிறது
சிவா மாலதி ஒரு இலக்கியவாதியோ, பதிப்பாளரோ அல்ல. இவர்களுடன் எந்தவிதத்திலும் தொழில்முறைரீதியாகத் தொடர்புபட்டவரும் அல்ல. அதாவது ஒரு அதிகார மையமாகத்திகழும் ஷோபாசக்தி மீது சிவா மாலதி போன்ற ஒரு சில நெருங்கிய வட்டங்களில் மட்டுமே அறியப்பட்ட ஒரு பெண் செயற்பாட்டாளர் கோபமுற்றிருப்பதென்பது வீணாண கற்பனையும், பழிச்சொல்லுமேயன்றி வேறில்லை.
ஷோபாசக்தியின் மற்றுமொரு சாமர்த்தியமான வாதம்;
அதுபோலவே காதலர்களுக்கும் பிரிந்து செல்வதற்கான உரிமை உண்டு. சிலவேளைகளில் இந்தப் பிரிவு நட்புணர்வுடன் சுமூகமாக நடக்கும். சிலவேளைகளில் முரண்பாடுகளால் எழுந்த கசப்புகளோடும் பழிவாங்கும் வன்மத்தோடும் இந்தப் பிரிவுகள் நிகழும். அங்கே நிச்சயமாக உணர்வுரீதியான பாதிப்புகளும் உளக்கொந்தளிப்புகளும் இருக்கும். ஆனால், இருவருக்கு இடையேயான இந்த உறவுச் சிக்கலை ‘பாலியல் சுரண்டல்’ எனச் சொல்லிப் பழிதீர்க்க நினைப்பது அருவருப்பானது. அதைப் பெண்ணியச் சாயம் பூசிய கண்டன அறிக்கையாக வெளியிடுவது தவறான முன்னுதாரணம். கண்டனத்திற்கு உரிய செயல். இத்தகைய பொய் அறிக்கைகளை உலாவவிடுவது என்பது எதிர்காலத்தில் உண்மைகளின், ஆதாரங்களின் அடிப்படையில் வெளியிடப்படும் அறிக்கைகளையும் சமூகம் சந்தேகத்தோடு அணுகத் தூண்டும் பொறுப்பற்ற செயல்.
திட்டமிட்டுப் பெண்களை வலையில் வீழ்த்தி, ஒரு பெண்ணுடன் உறவிலிருக்கும்போதே அப்பெண்ணுக்குத் தெரியாமல் வேறு பல பெண்களுடன் உறவிலிருப்பது வெறுமனே உறவுச்சிக்கலாக மட்டுமே கருதப்பட முடியுமா? அதிலும், ஆண் எனும் அடையாளத்திற்கும்மேலாக பிறழ்வுடைய பிரபல எழுத்தாளருக்கு இருக்கக்கூடிய அதிகாரமும், சிறப்புச் சலுகைகளுடனும் திட்டமிட்டவகையில் இத்தகைய நடத்தையில் ஈடுபடும்போது அதன் தாக்கமும் விளைவுகளும் சொல்லவும் வேண்டுமா? இருந்தாலும் பாலியல் சுரண்டல்களை மீண்டும் மீண்டும் உறவுச்சிக்கல்களாகத் திரித்து தப்பிக்கும்போக்கு பொதுவாக நிலவுவதன் காரணமாக பாலியல் சுரண்டல் என்றால் என்ன என்பதை மீண்டும் இங்கே தருகின்றோம்.
The UN defines sexual exploitation and abuse as follows:
Sexual exploitation is defined as any actual or attempted abuse of a position of vulnerability, differential power, or trust, for sexual purposes, including, but not limited to, profiting monetarily, socially or politically from the sexual exploitation of another. This includes transactional sex regardless of the legal status of sex-work in the country. It also includes any situation where sex is coerced or demanded by withholding or threatening to withhold goods or services or by blackmailing.
Sexual abuse means the actual or threatened physical intrusion of a sexual nature, whether by force, or under unequal or coercive conditions.
மேலுள்ள வரைவிலக்கணத்தின் மொழிபெயர்ப்பு பின்வருமாறு:
ஐக்கிய நாடுகள் சபையானது பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகத்தினை பின்வருமாறு வரையறுக்கின்றது:
- பாலியல் சுரண்டல் என்பது ஒருவரின் நலிவுற்ற நிலை, அதிகார வேறுபாடு, நம்பிக்கை போன்றவற்றினைத் துஷ்பிரயோகஞ்செய்து அவரைத் தனது பாலியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துதல் அல்லது பயன்படுத்த முயற்சித்தல் ஆகும். இது பணரீதியான, சமூகரீதியான அல்லது அரசியல்ரீதியான ஆதாயங்களைப் பெறுவதற்கானதாகவோ அல்லது வேறு வகையினதாகவோ இருக்கலாம்.
- பாலியல் துஷ்பிரயோகமென்பது பலவந்தமாகவோ அல்லது சமமற்ற அல்லது நிர்ப்பந்தமான நிலைமைகளின்கீழ் உடலில் பாலியல்ரீதியான அத்துமீறலினை மேற்கொள்ளுதல் அல்லது அத்தகைய அத்துமீறலினை மேற்கொள்ளப்போவதாக அச்சுறுத்தல்.
பாலியல் வன்முறை, பொருளாதாரரீதியாகச் சுரண்டியது, அதிகாரத்தை உபயோகித்துப் பாலியல் துர்ப்பிரயோகம் செய்தது போன்ற எந்தக் குற்றச்சாட்டுகளும் கண்டன அறிக்கையில் கிடையாது. பின்பு என்னதான் குற்றச்சாட்டு? காதல் உறவில் இருந்தவர்களை மேலாதிக்கம் செய்தேன், நம்பிக்கைத் துரோகம் செய்தேன், அவர்களுடன் திடீரெனத் தொடர்புகளைத் துண்டித்தேன் என்பவையே சாரமான குற்றச்சாட்டுகள்.
ஷோபாசக்தி பாலியல் சுரண்டலில் ஈடுபட்டார் என்பதே பிரதான குற்றச்சாட்டு. அவர் நம்பிக்கைத் துரோகம் என்பதை அப்பாவித்தனமான ஒரு விடயமாக முன்வைத்து, இதுதான் தன்மீதுள்ள ‘காரசாரமான குற்றச்சாட்டு’ என எள்ளிநகையாடுகின்றார். நம்பிக்கைத் துரோகம் எப்போது மேற்கொள்ளப்படலாம்? வாக்குறுதிகள் கொடுத்து அவற்றை நிறைவேற்றாதபோது தானே. பாலியல்ரீதியான நலனைப் பெற்றுக்கொள்வதற்காக நம்பிக்கையினைத் துஷ்பிரயோகம் செய்வதை பாலியல் சுரண்டல் என்பார்கள். அதுதவிர பாதிக்கப்பட்ட ஒரு பெண் கூறுகையில், அவர் நோயுற்றிருந்த காலத்தில் தனது சொந்த செலவில் வைத்தியசாலைச் செலவுகளைச் செய்திருந்ததனையும் குறிப்பிட்டிருந்தார். உறவிலிருந்த பெண்களுடன் செலவுகளைப் பகிர்ந்துகொண்டு முன்மாதிரியான உறவில் இருந்தீர்களா அல்லது அந்த உறவிற்கான செலவுகள் உறவிலிருந்த பெண்களின் தலைமீது சுமத்தப்பட்டதா?. அதுதவிர பாலியல் சுரண்டலும் பொருளாதாரச் சுரண்டலும் வெவ்வேறானவை. சிலசமயங்களில் இரண்டும் மேற்கொள்ளப்படலாம். சில சமயங்களில் நிதிச்சுரண்டல் அல்லாத பாலியல் சுரண்டல் மட்டுமேகூட மேற்கொள்ளப்படலாம் என்பதையும் அறிந்திருப்பது அவசியம். பொருளாதாரச் சுரண்டல் இடம் பெறாவிட்டால் அங்கு பாலியல் சுரண்டல் இடம்பெறவில்லை என அர்த்தப்படுத்துதல் அபத்தமானது.
அதுதவிர உறவினைத் தந்திரமாகப் பிரிந்த பிறகு உறவிலிருந்த பெண்களுடன் நட்பினைப் பேணுவதென்பதை ஒரு தந்திரோபாயமாகவே கையாள்பவர் ஷோபாசக்தி மாத்திரமல்ல அவர்வழிவந்த யதார்த்தன் மஹிதரன் போன்றோரும் தான். இவர்களுடைய பாலியல் சுரண்டல் தொடர்பான பாங்குகள் மற்றும் தந்திரோபாயங்களைப் பாதிக்கப்பட்ட பெண்கள் புரிந்துகொண்டு தமக்கிழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் பேச விழைந்தால் அதற்கான செவிமடுத்தலை இல்லாமற் செய்வதற்கான மற்றுமொரு தந்திரோபாயமே அவர்களுடன் நட்பினைப் பேணுவதாகும். ஷோபாசக்தி கூறுவதை உண்மையென்றே கொண்டாலும் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் தமது வாக்குமூலங்களைப் பகிர்ந்துகொண்டதும், அதனை உறுதிப்படுத்தும் விதத்தில் அறிக்கையில் கையொப்பமிட்டிருப்பதும் ஏன்? அவரது மொழியில் சொல்வதானால் ஷோபாசக்திக்கு சுட்டுப்போட்டாலும் உண்மையும் நேர்மையும் வராது என்பதை வரிக்குவரி நிரூபித்திருக்கின்றார்.
என்னுடைய புகார் என்னவென்றால், அப்படி என்னால் பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பெண்களின் சார்பில் இந்த நிமிடம்வரை எவரொருவரும் என்னிடம் பேசவில்லை என்பதுதானே.
கடைசியாக ஒன்று… இந்த அறிக்கையின் நோக்கம் என்னைப் பொறுப்புக்கூற வைப்பதுதான் என்றால், நான் பொறுப்பாக மறுப்புக்கூறி அந்த நோக்கத்தை இங்கே நிறைவேற்றி வைத்துவிட்டேன்.
ஒரு பாலியல் சுரண்டலில் ஈடுபடும் ஒருவரால் இதைவிட வேறு எவ்வாறு பதிலளிக்க முடியும் என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறார் ஷோபாசக்தி. பாலியல் சுரண்டலைப் பொறுத்தவரை பொறுப்புக்கூறலென்பது குற்றச்சாட்டுக்களை மறுத்துக்கூறல்தான் எனக்கூறுகிறார். பொறுப்புக்கூறலென்பது பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளுக்கான ஒத்துணர்விலிருந்து வருவது. தன்னைத் தற்காத்துக்கொள்வதற்கான அகங்காரத்திலிருந்தும் பதட்டத்திலிருந்தும் வருவதல்ல என்பதை இங்கு நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
இவ்விளக்கங்களினூடாக நாம் ஷோபாசக்தியின் மறுப்பறிக்கை ஒட்டுமொத்தமாகப் பொய்யினாலானது என்பதை எடுத்துக்காட்டுவதோடு, அண்மையில் கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி ஆசிரியரொருவரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பாடசாலை மாணவியொருவர் தற்கொலை செய்துகொண்டிருந்தார். அதன்பின் பொதுவெளிகளில் எழுந்த உரையாடல்களிலும் இதேபோன்ற பல அருவருக்கத்தக்க கேள்விகளே எழுப்பப்பட்டிருந்தன என்பதைச் சுட்டிக்காட்டுவதோடு, அந்த மாணவியை ‘நடத்தைப் பிறழ்வுடையவராக’, ‘மனநிலை பாதிக்கப்பட்டவராக’ பரப்பப்படும் கருத்துக்களிலும் உள்ள ஒற்றுமைகளைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். பாலியல் சுரண்டல், பாலியல் துஷ்பிரயோகம் எதுவாயினும் பாதிக்கப்பட்டவருக்கான சமூகமாக இந்த ஆண்மைய சமூகம் இல்லை, மாறாக குற்றவாளிகள் பக்கம் நின்று அவர்களைத் தூக்கிவிடுகின்ற சமூகமாகவே இது உள்ளது. இந்தநிலை மாறும்வரை எத்தனை தற்கொலைகளையும், எத்தனை பெண்கள் மற்றும் ஒடுக்கப்படுவோரின் வாழ்க்கையையும் பலிகொடுக்க வேண்டியிருக்குமென்பது எமக்குத் தெரியாது. பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கெதிரான தண்டனைவிலக்களிக்கும் சமூக மற்றும் சட்டப்போக்கு போன்றவை மாறாத வரை, சமத்துவமும், பெண்கள் பாதுகாப்பாக வாழும் உரிமையினை மதிக்கும் சமூகமும் தோன்றாதவரை ஒடுக்கப்படும் பெண்களுக்காகவும் ஏனைய சமூகத்தினருக்காகவும் எமது குரல் ஒரு கூட்டுக்குரலாக சமூகத்தின் மௌனத்தின்மீதான தீராத இரைச்சலாய் ஒலித்துக்கொண்டேயிருக்கும்.
உணர்வுத் தோழமையுடன் உங்களுடன் நிற்கின்றேன்.
ReplyDelete